இன்று "அவருடைய" சத்தம்
அக்டோபர் 2
🔸️ நல்ல தகப்பன்மார்களாய் இருந்திட வேண்டும்! 🔸️
ஒரு சமயம் தாவீதின் ஜீவியத்தில் அவனுடைய மகன் அப்சலோம், தன் தகப்பனுக்கு விரோதமாகவே திட்டம் தீட்டினான். அதன் மூலமாய் இஸ்ரவேலர்களின் இருதயங்களை தன் பக்கமாய் கவர்ந்துகொண்டு, முடிவில் தன் தகப்பன் தாவீதை சிம்மாசனத்திலிருந்தே துரத்தி விட்டான்!!
ஆனால், அச்சமயத்திலும் சில நண்பர்கள் தாவீதோடு சேர்ந்து துணையாய் நின்றார்கள். அவர்கள் யாவரும் முதல் தரமான போர் வீரர்களாயும், போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்ய ஆயத்தம் உள்ளவர்களாகவும் இருந்தார்கள். இந்த வீரர்கள் ஒரு நாளில் அப்சலோமோடு யுத்தம் செய்வார்கள் என தாவீதுக்கு நன்றாய் தெரியும். ஆகவேதான், தன் படைத்தளபதியாகிய யோவாபிடம், "பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள்" என கட்டளை கொடுத்தான் (2 சாமு 18:5).
இவ்வாறாகவே, நாமும் எப்போதெல்லாம் சபையிலுள்ள கடினமான சகோதரர்களோடு இடைபட வேண்டியிருக்கிறதோ, அச்சமயங்களில் தாவீது அப்சலோமுக்காக சொன்ன வார்த்தைகள் நம்முடைய மனதிற்கு முன்பாக கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பதாக! ஆம், "கர்த்தர் நிமித்தமாய் அந்த சகோதரனை மெதுவாய் நடப்பியுங்கள்" என்பதே தாவீதோடு இணைந்து நாமும் கூற வேண்டிய அற்புத வார்த்தைகளாகும்!
பின் நாட்களில், "அப்சலோம் கொல்லப்பட்டான்" என்ற செய்தியை தாவீது கேட்டவுடன், தாவீது மிகவும் அழுது, "என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாக செத்தேனானால் நலமாயிருக்கும்!" (2சாமு.18:33) எனக் கூறினான். பார்த்தீர்களா, தாவீது ஒரு உபாத்தியாயன் அல்ல! முரட்டாட்டம் செய்த தன் மகனிடத்தில் ஒரு தகப்பனின் இருதயம் கொண்டவனாகவே இருந்தான்.
இந்த தாவீது "தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷன்" என அழைக்கப்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை!! ஏனென்றால், தாவீதின் இருதயத்தைப் போலவே, தேவனுடைய இருதயத்தின் விருப்பமும் இருந்தது. அதாவது, "நான் உன்னுடைய இடத்தில் மரிக்க விரும்புகிறேன்" என்பதுதானே அவருடைய விருப்பம்!! தேவனுடைய இந்த விருப்பத்தின் பிரதிபலிப்பாகவே, ஆண்டவராகிய இயேசு கல்வாரியில் நமக்காக மரித்தார். இவ்வாறு தேவனுடைய இருதயத்தோடு நாமும் ஐக்கியமாய் பிரவேசிக்கும்போதுதான், நாம் மெய்யாகவே தகப்பனாய் மாறிட முடியும்!
ஜெபம்:
பரம தகப்பனே! பிள்ளைகள் எப்படி இருந்தாலும், சகோதரர்கள் எப்படி இருந்தாலும், எங்கள் உள்ளம் அவர்களிடம் அன்பையும் பட்சத்தையும் இழக்காது நல்ல தகப்பனாய் வாழ கிருபை தாரும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments