இன்று "அவருடைய" சத்தம்
அக்டோபர் 6
🔸️ துன்பத்தின் வாய்க்கால்கள் அநேகரை ஆசீர்வதித்திட முடியும்! 🔸️
தென்னிந்தியாவின் டோனாவூரைச் சேர்ந்த ஏமி கார்மைக்கேல் அம்மையார், படுத்த படுக்கையாக இருந்த காலத்தில்தான் மிக அற்புதமான புத்தகங்களையும், கவிதைகளையும் எழுதினார். அந்த அம்மையார் சுக பெலனோடு இருந்திருந்தால், இந்த புத்தகங்களையும் கவிதைகளையும் எழுதியிருக்கவேமாட்டார்! ஆம், நம்முடைய சுகமான சரீரத்திலும் "தொடர்ச்சியாக மாமிசத்தில் முள் கொண்ட" சரீரத்திலும் கிறிஸ்து மகிமைப்பட முடியும்!(பிலிப்பியர் 1:20).
ஆகவே, நம்மைச் சந்திக்கும் துக்கங்களையும், உபத்திரவங்களையும், தேவனுக்கு முன்பாகவும், மனுஷருக்கு முன்பாகவும், நம்மைத் தாழ்த்துவதற்குக் கிடைத்த அருமையான சந்தர்ப்பங்களாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இனியும், நாம் நமக்காக அழாதிருக்கக்கடவோம்! அதற்கு பதிலாக, சங்கீதம் 62:8 கூறியபடி "ஜனங்களே எக்காலத்திலும் அவரை நம்புங்கள். அவர் சமூகத்தில் உங்கள் இருதயங்களை ஊற்றிவிடுங்கள். தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்" என்றே நாம் இருப்போமாக! ஆம், "உங்கள் இருதயம் நொறுங்குவதற்கு சமீபமான வேளையில்" கர்த்தரும் உங்கள் சமீபமாயிருக்கிறார்! (சங்கீதம் 34:18).
நாம் அழுகையின் பள்ளத்தாக்கில் கடந்து வரும்போதுதான், தேவன் அதை மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படியான நீரூற்றாய் மாற்றிட முடியும்! (சங்கீதம் 84:6). பார்த்தீர்களா, நம் துன்பங்களின் மத்தியில் பரத்திலிருந்து வரும் ஜீவத்தண்ணீரால் தேவன் நமக்கு ஆறுதல் செய்து பரவசமளித்ததைப் போலவே... இப்போது அதே ஜீவத்தண்ணீரை நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கக் கூடியவர்களாய் தேவன் நம்மை மாற்றிவிட்டார்!!
ஒரு நாளில் நம் கண்ணீர் யாவையும் துடைத்துப் போடுவதாகவே தேவன் நமக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அதன்பிறகு துக்கம் இல்லை! உபத்திரவம் இல்லை! மரணமும் இல்லை! அழுகையும் இல்லை! கதறலும் இல்லை! வேதனையும் இல்லை!..... ஏனென்றால், முந்தினவைகள் யாவும் இப்போது ஒழிந்துபோயின!! நம் பிதா நம்மோடு எப்போதும் வாசமாயிருக்கும் அந்தப் புதிய வானத்திற்காகவும், புதிய பூமிக்காகவுமே இப்போது நாம் ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்! (வெளி. 21:1-4).
நம் இருதயத்திலிருக்கும் அந்த ஏக்கத்தின் பெருந்தொனியே "கர்த்தராகிய இயேசுவே, சீக்கிரமாய் வாரும்" என்ற ஜெபமாயிருக்கிறது!!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! எங்கள் துன்பத்தின் துக்கத்தில் மூழ்கிவிடாதபடி, அதில் கற்ற ஆறுதலையும், திவ்விய சுபாவத்தையும் கொண்டு அநேகரை ஆசீர்வதித்து வாழ்ந்திட எங்களுக்கு கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments