இன்று "அவருடைய" சத்தம்
அக்டோபர் 16
🔸️ மாம்ஷீக மகிழ்ச்சியை நாடுவது கூடாது! 🔸️
மகிழ்ச்சியாய் இருக்கும்பொருட்டு ஒருவன் கொண்ட எந்த சுயநல விருப்பமும் இச்சைக்கு ஒப்பான பாவமேயாகும்! அதனுடைய வேர் மாம்சத்தில் இருக்கிறபடியால், அது தேவனுக்கு முன்பாக ஒருக்காலும் நின்றிட முடியாது!! ஏனெனில், "மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய பிரமாணத்திற்கு உட்பட்டதல்ல! அவ்வாறு உட்படவும் முடியாது" என ரோமர் 8:7 ஆணி அறைந்தாற்போல் கூறுகிறது.
இன்றைய 21-ஆம் நூற்றாண்டின் இந்த மனுக்குலம் கொண்டிருக்கும் கொள்கை யாதெனில், "சந்தோஷமாய் இருப்பதற்கே நாங்கள் பிறந்திருக்கிறோம்!" என்ற ஒரு-வரி கொள்கை மாத்திரமே ஆகும். இவர்களில் ஒருவராவது "வீழ்ச்சியுற்ற மனிதன் சந்தோஷத்தைக் கேட்பதற்கு என்ன தார்மீக உரிமையுண்டு?" என தட்டிக் கேட்பதற்கு தைரியம் அற்றவனாக இருக்கிறான். இவர்களின் புத்தகங்கள், ஆடல், பாடல் அனைத்தும் அவனவன் தனிப்பட்ட விதத்தில் சந்தோஷத்தைத் தேடும் கடும் போராட்டத்தை சுட்டிக் காட்டுவதாகவே உள்ளது! தன்னுடைய உண்மை நிலையை உணர்ந்த எவனும், சந்தோஷத்தைக் கேட்பதற்குரிய உரிமை தனக்கு இல்லை என்பதை உணர்ந்திருப்பான்!
நல்ல உணர்வுள்ள மனிதன் புதிய ஏற்பாட்டின் ஒரு சில பக்கங்களை தியானத்துடன் வாசித்தாலே, சத்திய வேதத்தின் வலியுறுத்துதல் மகிழ்ச்சியை எல்லையாய் வைக்காமல், பரிசுத்தத்தை எல்லையாய் வைத்திருப்பதை மிக எளிதில் கண்டு கொள்வான். ஜனங்களின் 'இருதயத்தை' குறித்த நிலையில் தேவன் அதிக அக்கறை கொண்டிருக்கிறாரேயல்லாமல், அவர்களுடைய உணர்வுகள் எந்த நிலையில் இருக்கிறது என்பது அவருக்கு அதிக முக்கியமல்ல.
கீழ்ப்படிதல் கொண்டவனாய் தேவ சித்தத்தை நிறைவேற்றுகிறவன் மாத்திரமே சந்தேகத்திற்கு இடமில்லாமல் பூரண மகிழ்ச்சி கொண்டவனாக இருப்பான். ஆகிலும், அவனைப் பொறுத்தவரையில் "தான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறான்" என்ற கேள்வியல்ல... தான் "எவ்வளவு பரிசுத்தமாய் இருக்கிறான்" என்பதே முக்கிய கேள்வியாய் அவனுக்குள் குடிகொண்டிருக்கும்!
தான் பரிசுத்தமில்லாது வாழ்ந்து கொண்டு, அதே சமயம் ஒருவன் மகிழ்ச்சியை நாடுவது மாபெரும் மதியீனம்!
தேவனுடைய சித்தம் இன்னதென்று அறியவும் பின்பு அதை நிறைவேற்றவும் எடுக்கின்ற முயற்சியே சாலச் சிறந்ததாகும்! எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? என்ற விஷயத்தை கிறிஸ்துவினுடைய தீர்மானத்திற்கு விட்டுவிடுவதே ஒப்பற்ற வாழ்க்கையாகும்!
ஜெபம்:
அன்பின் பிதாவே! வீழ்ச்சியுற்ற எங்கள் மாம்சத்தில் 'பாவம்' மகிழ்ச்சியை நாடுகிறது! நாங்களோ, பரிசுத்த ஜீவியத்திலும், பிதாவின் சித்தம் செய்வதிலும் பிரதான விருப்பம் கொண்டிருக்க உதவும்!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments