Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

டிசம்பர் 02

 இன்று "அவருடைய" சத்தம்

 

டிசம்பர் 2


🔸️ இயேசு கிறிஸ்துவைப் போலவே ஜெயித்து, பரலோகத்தை களிகூரச் செய்வோம்! 🔸️


புதிய ஏற்பாட்டின் மூன்று இடங்களில் பரலோகம் களிகூருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1) லூக்கா 15:7; இங்கே 'மனந்திரும்புகிற ஒரு பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிறது' என கூறப்பட்டுள்ளது.  

2) வெளி.12:12; 'ஒரு விசுவாசி சாத்தானை ஜெயிக்கும்பொழுது பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிறது'. 

3) வெளி.19:7; 'ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் வந்தது. அவரின் மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள். எனவே நாம் சந்தோஷப்பட்டுக் களிகூருவோம்' என கூறப்பட்டதை வாசிக்கிறோம். 

இங்கு வரிசையாக ஒரு விசுவாசிக்கு மூன்று காலக் கட்டங்கள் வைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். 


முதற் காலக்கட்டமாக, ஒருவன் தன் பாவங்களிலிருந்து மனந்திரும்புவதும்; இரண்டாவது காலக்கட்டமாக, இந்த விசுவாசி தன் தனிப்பட்ட ஜீவியத்தில் சாத்தானை ஜெயிப்பதும், மூன்றாவது காலக்கட்டமாக, தன்னைத் தானே ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்திற்கு அவரின் மனைவியாக ஆயத்தம் செய்துகொள்வதுமாகும். இக்காலக் கட்டங்களை நாம் செவ்வனே பூர்த்தி செய்தால் பரலோகத்தில் நம் மூலமாக மகிழ்ச்சி உண்டாகும்!


இயேசு கிறிஸ்து சாத்தானை ஜெயித்தபடியால் இப்போது அதே ஜெயத்தை சாத்தானின்மீது பிரகடனம் செய்யும் சிலாக்கியத்தை நமக்கு இயேசு அளித்திருக்கிறார். எனவேதான் ரோமர் 16:20-ம் வசனத்தில், "சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்" எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, சாத்தான் ஏற்கனவே சிலுவையில் நசுக்கப்பட்டுவிட்டான். ஆனால், இப்போது பூமியில் இருக்கும் விசுவாசிகளுக்கு இதே சிலாக்கியம் இயேசுகிறிஸ்துவினால் கையளிக்கப்படுகிறது.


வெளி 12:4-ல் சாத்தான், பிள்ளையை (கிறிஸ்துவை) பட்சிக்கும்படி முயற்சித்தான். அதில் அவன் தோற்றுப்போனான்! சாத்தான் வானமண்டலத்தில் மிகாவேலோடும் அவனுடைய தூதர்களோடும் யுத்தம் செய்தான். அதில் அவன் தோற்றுப்போனான்! இதே சாத்தான் நம்மோடும் யுத்தம் செய்கிறான். நாம் தோற்கடிக்கப்படலாமா? கூடாது! இயேசு நமக்காக சிலுவையில் சம்பாதித்த வெற்றியைச் சாத்தானின்மீது பிரகடனம் செய்து நம் அனுதின வாழ்க்கையில் அவனை நம் கால்களின்கீழ் மிதிக்க வேண்டும் என்ற அழைப்பை உணராது இருப்போமென்றால், அது வெட்கத்திற்கு உரியதாகும்! நாமோ, சாத்தானையே நம் கால்களின்கீழ் மிதித்து வாழவேண்டும்! 


ஜெபம்:

எங்கள் பரம தகப்பனே! இயேசுவில் "முற்றிலும் ஜெயம் பெறும் வாழ்வினால்" பரலோகத்தை நாங்கள் களிப்புறச் செய்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".    


From:-

https://t.me/hisvoicetoday



Post a Comment

0 Comments