இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 3
🔸️ நாம் போராடாமல், கர்த்தரே பெற்றுத்தரும் ஜெயம்! 🔸️
பழைய ஏற்பாட்டில் நம்மை பக்தி விருத்தி அடையச் செய்திடும் மோசேயின் பாடல் வருகிறது.
இந்தப் பாடலை யாத்திராகமம் 15-ம் அதிகாரத்தில் காண்கிறோம். இஸ்ரவேல் புத்திரர்கள் எகிப்து தேசத்தை விட்டு வெளியே வந்து, செங்கடலைக் கடந்து, பார்வோனும் அவனுடைய சேனைகளும் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டு. . . ஆகிய இந்நிகழ்ச்சிகள் இஸ்ரவேல் புத்திரரை பரவசம் கொள்ளச் செய்தது! அச்சமயம்தான் மோசேயும் இஸ்ரவேல் புத்திரர்களும் சேர்ந்து கர்த்தரை புகழ்ந்து, "கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார். . ." (யாத்.15:1) எனப் பாடினார்கள்.
இந்தப் பாடல் வெளிப்படுத்தின விசேஷத்தில் நடந்த முக்கியமான நிகழ்ச்சியை உங்களுக்கு நினைவுறுத்தவில்லையா? வெளி.6-ம் அதிகாரத்தில், அந்திக்கிறிஸ்துவாக வெள்ளைக் குதிரையில் ஏறி வந்தவனை, கர்த்தர் ஜெயம் கொண்டார்!
மேலும், "கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர். அவர் எனக்கு இரட்சிப்புமானவர். அவரே என் தேவன், அவரே என் தகப்பனுடைய தேவன். அவரை உயர்த்துவேன். கர்த்தரே யுத்தத்தில் வல்லவர். கர்த்தர் என்பது அவருடைய நாமம்" (யாத்.15:2,3) எனவும் பாடினர்.
கடைசியாக சம்பவிக்கப்போகும் அர்மகெதோன் யுத்தத்தில், அந்திக்கிறிஸ்துவும் அவனுடைய சேனைகளும் இஸ்ரவேல் தேசத்தில் முகாமிட்டு, இஸ்ரவேல் தேசத்தை தங்கள் முழு பலத்தோடு தாக்குவார்கள். இந்த சரியான சமயத்தில், இயேசுகிறிஸ்து தன் பரிசுத்தவான்களோடு பரத்திலிருந்து இறங்கி வருவார். அவருடைய பாதங்கள் அவர் முந்தி பரத்திற்கு ஏறிச்சென்ற இடமான ஒலிவ மலையின்மேல் வந்து இறங்கும். அப்போது அந்திக் கிறிஸ்துவையும், அவனுடைய சேனைகளையும் இயேசுகிறிஸ்து அழித்தொழிப்பார். 'அவரே யுத்தம் செய்து' ஜெயித்திருந்தாலும், பரிசுத்தவான்களாகிய தேவ ஜனங்கள் அந்த ஜெயத்தில் பங்குபெற்று மகிழ்ந்திருப்பார்கள். இன்று நாமும் இவ்விதமே ஜெயம் பெறுகிறோம்!!
இந்த விசுவாசம் கொண்ட யாவரும் மோசேயின் பாடலை, இன்றும் பாட முடியும். இப்பாடலுக்காக ஏதோ கட்டிடத்திற்குள் நாம் பாடல் பயிற்சி பெற வேண்டியதில்லை. நம் ஒவ்வொரு நாள் ஜீவியத்தின் சம்பவங்களிலும், "நான் பதிலுக்குத் திரும்பப் போராடமாட்டேன்; 'கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்' எனவே நான் அவர் மீது நம்பிக்கை வைத்து சும்மாயிருப்பேன்!" என்ற மோசேயின் பாடலை நாம் ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்வோமாக!
ஜெபம்:
எங்கள் அன்பின் பிதாவே! இவ்வுலக சூழ்நிலைகளில் போராட துடிக்கும் எங்கள் சுயம் சிலுவையில் ஒழிவதாக! நீரே முன்நின்று ஜெயமளிக்கும் வாழ்வை எங்களுக்குத் தருவீராக! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments