இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 14
🔸️ பரிசுத்தவான்களின் ஜெபத்தில் பங்குபெற வேண்டும்! 🔸️
வெளி 5:8-ம் வசனத்தில் மூப்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு சுரமண்டலத்தையும் ஒரு பொற்கலசத்தையும் பிடித்திருந்தார்கள். அந்தப் பொற்கலசம் தூபவர்க்கத்தால் நிறைந்திருந்தது. இந்த தூபவர்க்கம் என்ன தெரியுமா? பரிசுத்தவான்களுடைய ஜெபங்கள்! தூதர்களுக்கு மேலாக அதிகாரம் பெற்றிருந்த 24 மூப்பர்களும் (the angelic authorities) தேவனுக்கு முன்பாக படைத்தது யாது? பரிசுத்தவான்களுடைய ஜெபங்களையே அவர்கள் படைத்தார்கள்! 2020 வருடங்களாக ஜெபித்த, ஜெபித்துக் கொண்டிருக்கும் பரிசுத்தவான்களுடைய ஜெபங்கள் யாவும் இந்த பொற்கலசத்தில் வந்து சேர்கிறது என்பதை அறிவீர்களா? இப்பொற்கலசம் ஒருநாள் நிறைய போகிறது. அப்போது பரிசுத்தவான்களின் ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த இப்பொற்கலசங்கள் தேவனுக்கு முன்பாக சமர்ப்பிக்கப்படும்.
கவனியுங்கள், இவ்விதம் பொற்கலசத்தில் நிரப்பப்படப்போகும் பரிசுத்தவான்களின் பிரதானமான ஜெபம் யாது தெரியுமா? அந்த ஜெபம், "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய இராஜ்யம் வருவதாக....." என்பதுதான்! பரிசுத்தவான்களுடைய ஜெபமாக இருப்பதெல்லாம், பரலோகத்தில் உம்முடைய இராஜ்யம் இருப்பதுபோல பூமியிலேயும் உம்முடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதாக! என்ற ஜெபம்தான். "தேவரீர், இப்பூமியை துரிதமாய் மீட்டுக்கொள்ளும்" என்பதே இவர்களின் பேராவல்! இவ்வித ஜெபத்தை அனேக பரிசுத்தவான்கள் மிகுந்த பாரத்தோடு ஜெபித்தார்கள்...இன்றும் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஜெபத்தை இயேசு ஜெபிக்கும்படி சொன்னாரே! எத்தனைபேர் இன்று இச்ஜெபத்தை ஜெபிக்கிறார்கள்?
இந்தப் பொற்கலசம் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றுவதற்கு ஒப்பாகும். நீங்கள் ஊற்றியவுடன் அந்தப் பாத்திரம் உடனே நிறைந்துவிடுமா? இல்லை. ஆயினும் தொடர்ந்து ஊற்றப்படும்பொழுது அந்தப் பாத்திரம் நிச்சயமாய் நிரம்பிவிடும். இவ்விதமே நீங்களும் நானும் அவருடைய ராஜ்யம் வரவேண்டுமென வாஞ்சித்து ஜெபிக்கும் போதெல்லாம், இந்தப் பொற்கலசத்தை நிறைப்பதற்கு ஊற்றுகிறவர்களாய் இருக்கிறோம். இப்போது இந்த ஜெபத்தின் முக்கியத்தை அறிந்து கொண்டீர்களா? எந்த ஜெபம்? என் முதுகு வலிக்காகவும், என் பதவி உயர்வுக்கும் இன்னும் இதுபோன்ற உலக காரியங்களுக்காக ஜெபிக்கும் ஜெபமா?
இவைகளுக்கெல்லாம் மேலாக, தேவனுடைய இராஜ்யம் உங்களைப் பிரதானமாக ஆட்கொண்டு நிறைந்திருக்கிறதா? இவ்விதம் பூமியில் தேவனுடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்ற வாஞ்சையின் ஜெபமே மிகமிக முக்கியமானதாகும்!
ஜெபம்:
எங்கள் பிதாவே! கேடான இந்த உலகில் உம் பரிசுத்த நாமமும், உம் நீதியின் இராஜ்யமும் விரைவில் வர வேண்டும் என்ற ஏக்கம் உள்ள ஜெபத்தை எங்களுக்குத் தந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments