இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 19
🔸️ வாழ்க்கைத்துணை நீங்கினாலும், நீங்காத துணையாய் கர்த்தர் உள்ளார்! 🔸️
"உன் சிருஷ்டிகரே உன் நாயகர் (கணவர்); சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார் (ஏசாயா 54:5) என்று உன் கர்த்தர் சொல்லுகிறார்" என்ற வசனம் எத்தனை ஆறுதலாய் இருக்கிறது.
தன் இளங்கணவரை ஆண்டவருடைய அழைப்பிற்குச் செல்லும்படி இழந்த ஒரு பக்தியுள்ள சகோதரி, தன் கணவரை இழந்த அதே மாதத்தில் கீழ்க்கண்ட செய்தியை வாசித்தார்கள்! அந்தச் செய்தியின் மூலமாய் தேவனுடைய பெரிதான ஆறுதலை அச்சகோதரி கண்டடைந்தார்கள்!
"அதோ அங்கே சில பெண்கள் கூட்டத்தை காண்கிறேன்! அவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது சில மாதங்களுக்கு முன்பாகவோ அல்லது சில வாரங்களுக்கு முன்பாகவோ அல்லது சில நாட்களுக்கு முன்பாகவோ 'வல்லமையும் ஞானமும் நிறைந்த' ஓர் இளைஞனைத் தங்கள் துணையாய் பெற்றார்கள்! அந்த சம்யுக்த இளைஞன் தங்களின் வாழ்க்கை பாரங்களையெல்லாம் தன்மீது ஏற்றுக்கொண்டபடியால்....இவள், பொறுப்பின் அழுத்தத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றுவிட்டாள்.
அந்த இளம் கணவனின் நட்பில் வாழ்ந்த நாட்கள்தான் எத்தனைப் பிரகாசமும் மகிழ்ச்சியுமாய் அவளுக்கு இருந்தது! ஆனால், அந்தோ! காரிருளான அந்த நாள் வந்தபோது தன் நேசத்துக்குரியவரை அவ்விருள் பறித்துச் சென்றுவிட்டதே! ஆ, இப்போது தனிமை! வெறுமை! வறட்சி! சொல்லொண்ணா பாரமும் கவலையும் இன்று அவளை கவ்விக்கொண்டது.
பாதிப்புக்குள்ளான ஸ்திரீயே! நான் சொல்வதை சற்று கவனி: உன் வலப்பக்கத்தில் ஒருவர் நடந்து வருகிறார்! அவர், இந்த உலகில் வாழ்ந்த எந்த அன்புள்ள கணவனைக்காட்டிலும், எந்த ஞானமுள்ள கணவனைக்காட்டிலும், எந்த பெலசாலியான கணவனைக்காட்டிலும்.... அதிக அன்புள்ளவர்! அதிக ஞானமுள்ளவர்! அதிக பெலனானவர்! உன்னை நடத்திச் சென்று உதவுவதற்கு சர்வ சம்பூரணர்!! அவர் உன் வாழ்க்கையில் உள்ள சகல பாரங்களையும், பொறுப்புக்களையும் தாங்கி ஏற்றுக்கொள்ள ஆயத்தமாய் இருக்கிறார்! நீ நினைப்பதைக் காட்டிலும் மேலானவைகளைச் செய்ய ஆயத்தமாய் இருக்கிறார். வெறுமையும் துன்பமும் நிறைந்த உன் இருதயத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் அவர் வந்து அமர்ந்திட காத்துக் கொண்டிருக்கிறார். உன்னிடம் வந்து தங்கிட நீ அவருக்கு இடம் கொடுத்துவிட்டால், உன் எல்லா தனிமையும், நெஞ்சின் வேதனையும் உன்னை விட்டு நிரந்தரமாய் மாயமாய் மறைந்துவிடும்!"
ஜெபம்:
எங்கள் அன்பின் தந்தையே! எங்கள் வாழ்க்கை துணை இழப்பினும், உமது பலத்த புயத்தின் ஆதரவை காணச் செய்தீரே, உமக்கே நன்றி! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments