இன்று "அவருடைய" சத்தம்
அக்டோபர் 7
🔸️ மனுஷருக்கு முன்பாக கண்ணீர் சிந்தக்கூடாது! 🔸️
ஆண்டவராகிய இயேசு ஜெபம் பண்ணுகையில், அவருடைய "வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் தரையில் விழுந்தது" என வாசிக்கிறோமே! (லூக்கா 22:44). வியாகுல நேரத்தில் எந்த மனிதனிடமும் சென்று நம் "கண்ணீரைக்" காட்டிவிடாமல், 'வழக்கமான' நம் கெத்செமனேக்கு சென்று நம் "பிதாவிடம்" சிந்தும் கண்ணீர் நமக்கு கிட்டிய வாழ்வின் ஒப்பற்ற பாக்கியம் என்றே கூறவேண்டும்!
எத்தனை மானிடர் சூழ நின்று நமக்கு ஆறுதல் கூறி என்ன பிரயோஜனம்? அவை அனைத்தும் குப்பைகள்! ஆ, கண்ணீர் துளிகளை நம் நேசரின் ஒரு விரல் வந்து துடைப்பதுதான் எத்தனை ஆறுதல்!!
இயேசு மன்றாடி கண்ணீர் வடித்ததெல்லாம், எவ்வித துன்ப சூழ்நிலையிலும் "என் சித்தம் அல்ல; உம் சித்தமே ஆகக்கடவது" என்ற மனபாரமே ஆகும். "உமக்குச் சித்தமாயிருந்தால் மாத்திரமே இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கட்டும்" என்றார் (லூக்கா 22:42). சில வேளைகளில், தேவன் சூழ்நிலைகளை மாற்றக்கூடும்! இன்னும் சில வேளைகளில், சூழ்நிலைகளை மாற்றாமலே, அதற்குள் நடத்திச் செல்வார்! எதுவாயிருந்தாலும், "பிதாவின் சித்தம்" செய்வதே இயேசுவுக்கும், அவருடைய சீடர்களுக்கும் காணப்படும் பிரதான தவிப்பாகும்! தங்களின் "சுய சுத்தம்" செய்து, பிதாவின் சமூகத்தை இழந்து வாழ்வதைவிட, சாவதுமேல் என்பதே அவர்களின் கண்ணீர் ஜெபமாயிருக்கிறது!!
அவருடைய ஆத்துமா கலங்கிய வேளையில், எப்படியாவது அந்த சூழ்நிலையிலிருந்து தான் விடுவிக்கப்பட வேண்டும் என்பது அவரது கூக்குரலாயிராமல்.... "பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்!" என்பதே அவரது கூக்குரலாயிருந்தது (யோவான் 12:27,28). ஆகவே, தனக்காக ஒருபோதும் கண்ணீர் சிந்தாமல் "பிதாவின் சித்தம்" செய்யப்பட வேண்டும் என்பதற்கு மாத்திரமே கண்ணீர் சிந்தினார்! ஆகவேதான், தனக்காக அழுத ஸ்திரீகளைக் கண்டு, "எனக்காக அழாதீர்கள்" (லூக்கா 23:28) என சட்டென்று கூறிவிட்டார். அதேசமயம், "உங்களுக்காக அழுங்கள்" என வேண்டிக் கொண்டார். இங்கேயும் எருசலேம் குமாரத்திகள் "சுய-அனுதாபத்திற்காய்" அழுவதற்கு அவர்களிடம் அவர் கூறவில்லை என்பது தெளிவாயிருக்கிறது. மாறாக, தன்னைப் போலவே 'கெத்சமனே அனுபவங்களில்' பிதாவின் சித்தம் தங்கள் வாழ்வில் நிறைவேறுவதற்கும், பிதாவின் நாமம் மகிமைப்படுவதற்கும் ஜெபித்து அழுதிடவே பாதை காட்டினார்!
ஜெபம்:
அன்பின் தந்தையே! எங்கள் கண்ணீரை நீரே கண்டு, எங்கள் இதய வாஞ்சை தீர்த்திட முடியும்... சுயத்தின் கண்ணீராய் அல்ல, உம்முடைய சித்தம் செய்திடும் கண்ணீராய் இருந்திட கிருபை செய்தருளும்,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments