இன்று "அவருடைய" சத்தம்
நவம்பர் 22
🔸️ சிலுவையின் பாதை, ஜெயத்தின் பாதை! 🔸️
சிலுவை செய்தியின் மறுபுறத்தில் ஒரு பிரகாசமான செய்தியும் அடங்கியிருக்கிறது! ஆம், சிலுவையே அதன் முடிவல்ல. . . அது, உயிர்த்தெழுந்த வாழ்விற்குள் நடத்தும் பாதையாகவும் இருக்கிறது. சிலுவையின் கிரியையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு "ஒரு சந்தோஷம் அவர்களுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது" (எபிரேயர் 12:2). நிலத்தில் விழுந்து மரிக்கும் கோதுமை மணி "அதே நிலையில்" அங்கு இருப்பதில்லை. . .அது முளைத்து, ஓரு ஜெயமுள்ள கனி கொடுக்கும் வாழ்விற்கே மலர்கிறது!! சிலுவையின் பாதையை ஏற்றுக்கொண்ட ஒரு விசுவாசி மற்றவர்களால் தவறாய் புரிந்து கொள்ளப்பட்டு கடினமான பாதையில் சென்றாலும், முடிவில் தேவன் அவனை தூக்கி நிறுத்துவார். ஆம், கனி கொடுக்கும் ஜீவியம் சுயத்திற்கு மரிப்பதிலிருந்தே பொங்கி வருகிறது!
இதற்கு யோசேப்பின் வாழ்க்கை ஓர் உதாரணமாக இருக்கிறது. தான் நேசித்த தன் சொந்த சகோதரர்களால் அடிமையாய் விற்கப்பட்ட அனுபவம் ஒரு கொடிய கசப்பான அனுபவமாகும்.
இவை யாவற்றின் விளைவாய். . . முடிவில் அவன் எகிப்தின் அதிபதியாய் மாறினான்! ஆம், தன்னை கனம் பண்ணுகிறவர்களை தேவன் எப்போதுமே கனம் பண்ணுகிறார் (1 சாமுவேல் 2:30). அன்றும் அதை செய்தார்! இன்றும் அதை செய்கிறார்!! யோசேப்புக்கு நடந்ததுபோல் 'உலகத்தின் கண்களுக்கு பகிரங்கமானதாய்' அவர் தரும் கனம் எல்லா சமயங்களிலும் இருப்பதில்லை. ஆகிலும், "தெய்வீக மதிப்பிற்குரிய கனத்தைத்" தவறாமல் தந்து நம்மை அவர் முடிசூட்டுகிறார்!!
எபிரேயர் 2:14 கூறுகிறபடி பிசாசானவனை "தன் மரணத்தினாலே" அழித்தார்! நம் ஆண்டவரே மரணத்தின் மூலமாக சாத்தானை ஜெயித்திருப்பாரென்றால், அவருடைய சீஷர்கள் பிசாசானவனை ஜெயித்திட இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை! இயேசுவின் நாமத்தில் சில அற்புதங்களைச் செய்துவிட்டால், சாத்தானை தோற்கடித்து விட்டதாக அநேகர் எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால், கிறிஸ்துவின் சிலுவையாகிய அந்த ஒரே ஆயுதமேயன்றி வேறு எதற்கும் சாத்தான் மடங்குவதில்லை!
சிலுவையின் பாதை ஒன்றே ஜெயத்தின் பாதைக்கு அடிகோலாகும். நம் இருதயத்தின் உள்ளிருந்தோ அல்லது மற்றவர்களிடமிருந்தோ "சிலுவையின் பாதையை தவிர்த்துவிடு" என தொனிக்கும் குரல் எப்போதுமே 'பிசாசின் குரல்' என்பதைக் கண்டறிய தவறிவிடாதிருங்கள்!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! சிலுவையின் மரணத்தால், சாத்தானை ஜெயித்த இயேசுவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, எக்காலத்தும் சிலுவையின் வழியை விட்டு விடாதிருக்க கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments